*உலக யோகா தினம்*

யோக:’ என்பது சமஸ்கிருதச் சொல். இதன் வேர்ச் சொல். யுஜ். யுஜ் என்றால் இணைதல். இணைதல் என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அம்சங்கள் இருக்க வேண்டும்.

இங்கே மனிதன், தெய்வம் ஆகிய இரண்டு அம்சங்கள் குறிப்புணர்த்தப்படுகின்றன. மனிதன் தெய்வத்தோடு இணைதலே யோகம் எனப்படுகிறது.

ஜீவாத்மா, பரமாத்மா இணைவு என்றும் இதைப் புரிந்துகொள்ளலாம். மனித வாழ்வு இறை நிலையை அடைவது என்றும் விளக்கமளிக்கலாம்.

எல்லைக்குட்பட்ட வாழ்வு, அந்த எல்லைகளைத் தாண்டி, எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்துடன் உறவாடுதல் என்றும் கூறலாம்.

இணைவு அல்லது இணைதல் என்பதுதான் யோகத்தின் அடிப்படை.
இந்த இணைப்புக்கான வழிகள் பலவாக இந்திய ஆன்மிக மரபில் சொல்லப்பட்டிருக்கிறது. செயல், பக்தி, ஞானம் ஆகியவற்றின் மூலம் இந்த இணைவு சாத்தியம் என்று சொல்லப்படுகிறது.

ராஜ யோகம் என்று சொல்லப்படும் யோகமானது அன்றாட வாழ்க்கை, ஸ்தூல உடல், உடலின் உள்ளுறுப்புகள், மனம், அறிவு, ஆழ்மனம் ஆகிய அனைத்தையும் சீர்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த இணைவைச் சாத்தியப்படுத்த முடியும் என்று சொல்கிறது.

வாழ்வின் பல்வேறு கூறுகளையும் தொட்டு விரியும் இந்தத் தத்துவத்தை முன்வைத்தவர் பதஞ்சலி முனிவர்.

இவர் எழுதிய யோக சூத்திரம் என்னும் நூலில் இதற்கான விளக்கங்கள் இருக்கின்றன. இந்த நூலுக்கு விவேகானந்தர், பாரதியார் ஆகியோர் உரை எழுதியிருக்கிறார்கள்.

தியானம் உள்பட இன்று நாம் காணும் பல்வேறு ஆன்மிகப் பயிற்சிகளும் இதை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன