சென்னை, ஜூன் 17--'பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வியில் அச்சம் இன்றி சேரலாம்; குழப்பம் இன்றி தங்களுக்கான கல்லுாரிகளை தேர்வு செய்யலாம்' என, தனியார் பல்கலைகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த சந்தேகங்களுக்கு, பல்வேறு தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.தேர்வு மதிப்பீட்டில் சவால்இந்த வகையில், டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை வேந்தர் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., முன்னாள் இயக்குனர் ரவிச்சந்திரன் அளித்த பேட்டி:


பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை எதன் அடிப்படையில் வழங்குவது என்ற கேள்வி எழுகிறது. இந்த அசாதாரண சூழலை நாம் மட்டுமல்ல, உலகமே எதிர்கொண்டு வருகிறது.கடந்த ஆண்டில் நாம் வெற்றிகரமாக, 'ஆன்லைன்' வழியில் பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி என அனைத்திலும் பாடங்களை நடத்தியுள்ளோம்.


இந்த ஆண்டும் ஆன்லைன் வழியாகவே கற்பிக்க துவங்கியுள்ளோம். கற்றலில் நாம் சிறப்பாக செயல்படும் அதேநேரம், மாணவர்களின் மீதான மதிப்பீட்டு முறைகளே, நமக்கு முன் நிற்கும் மிகப்பெரிய சவாலாகும்.மாற்றங்கள்சர்வதேச அளவில் உயர் கல்வி சேர்க்கை குறித்த குழப்பம் நிலவினாலும், அனைத்து நாட்டு கல்வி நிறுவனங்களும், இந்த ஆண்டு உயர் கல்வி சேர்க்கையில் சில தளர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


'அனைத்தும் கடந்து போகும்' என்பதுபோல், கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையும் கடந்து போகும். மாணவர் சேர்க்கை முறையில் சில மாற்றங்கள் நிகழும். எனவே, பெற்றோரும், மாணவர்களும் எந்தவித அச்சமும் இன்றி இருக்க வேண்டும்.சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்கள் நிகழும். அவ்வாறு, 'அட்மிஷன்' முதல் கற்பித்தல், வீட்டுப்பாடம், செயல்முறைப் பயிற்சி, தேர்வுகள் நடத்துதல், மதிப்பீடு என அனைத்தும் ஆன்லைன் வழியாகவே வழங்கப்படுகின்றன.


எங்கள் கல்வி நிறுவனத்திலும், எட்டு பட்டப் படிப்புகளை ஆன்லைன் வழியாகவே வழங்குகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.சவீதா பல்கலையின் பதிவாளர் தனசேகரன் கூறியதாவது:நாடு முழுதும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், இன்ஜினியரிங் படிக்க பதிவு செய்தாலும், 15 லட்சம் பேர் தான் வெற்றிகரமாக படிப்பை நிறைவு செய்கின்றனர். அதில், வேலைக்கான திறன்களை பெற்று, கல்லுாரியை விட்டு வெளியே வரும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உண்டு.மாணவர்களுக்கான புத்தாக்க செயல்பாடுகள், அதிகளவிலான வேலை வாய்ப்புகளை வழங்கும்.'பயோமெடிக்கல், பயோடெக்னாலஜி' உட்பட, 'பயாலஜி' சார்ந்த வாய்ப்புகளும், 'கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., டேட்டா சயின்ஸ், ஆட்டோமொபைல், கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எனர்ஜி மற்றும் என்விரான்மென்ட்' ஆகிய துறைகளிலும், வரும் காலங்களில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டத்துடன் வழங்கப்படும், 'ஆரக்கிள், மைக்ரோசாப்ட், ஆண்ட்ராய்டு ஸ்டூடியோ' உட்பட, மாணவர்களின் துறை சார்ந்த பல வேலை வாய்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு படிப்புகள், வாய்ப்புகளை விரிவடையச் செய்கின்றன.கல்வி நிறுவனம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள நிறுவனங்களுடன் மட்டுமின்றி, சர்வதேச நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்து, மாணவர்களுக்கு 'இன்டர்ன்ஷிப் மற்றும் புராஜெக்ட்' செய்வதற்கு சாதகமான வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.கல்வி கடன்பொதுவாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்குமே கல்விக் கடன் பெற முடியும். கல்வி கட்டணம் மட்டுமின்றி, புத்தகம், கற்றல் உபகரணங்கள் என கல்வி சார்ந்த இதர செலவினங்களுக்கும் வங்கிகளில் கல்விக்கடன் பெறலாம்.கல்விக் கடன் பெறுவதற்கு, கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்குகின்றன. கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களே உதவித் தொகையுடன், கல்வி கட்டண விலக்கும் அளிக்கின்றன. ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றையும் மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.