கல்வி தொலைக்காட்சியில், புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாகபாடங்களை ஒளிபரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


புதிய காணொலிகள்


அதன்படி 2 முதல் 12-ம்வகுப்பு வரையான பாடங்களின் புதிய காணொலிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பு நிகழ்வை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். கல்வி தொலைக்காட்சியுடன்12 தனியார் தொலைக்காட்சிகளிலும் இந்தக் காணொலிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.மேலும், கல்வி தொலைக்காட்சியின் யூ-டியூப் தளத்திலும் பதிவேற்றப்படுகின்றன.இதைத் தொடர்ந்து 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ.வேலு,செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


வானொலியில் ஒலிபரப்பு


இதுதவிர, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஒலி வடிவிலான பாடங்கள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.