புதுடில்லி-பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியோரின் விபரங்களை சேகரித்து, அவர்கள் மீண்டும் படிப்பை தொடர நிதியுதவி அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்திஉள்ளது.

பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் கைவிட்டோர் குறித்த தகவல்களை சேகரிக்க, மத்திய கல்வி அமைச்சகம், 'பிரபந்த்' என்ற வலைதளத்தை துவக்கியுள்ளது. இது குறித்து, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டு உள்ள செய்தி:மத்திய அரசு, ஒவ்வொரு மாணவரின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கிறது. அதன்படி, பிரபந்த் என்ற வலைதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை, பள்ளி மற்றும் சிறப்பு பயிற்சி மையங்களில் படிப்பை பாதியில் நிறுத்திய, 6 - 18 வயது வரை உள்ளோரின் விபரங்களை பதிவேற்ற வேண்டும். அதன் அடிப்படையில், 6 - 14 வயது வரையிலான மாணவர்கள், 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் கீழ், பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படும்.

அதேபோல, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, படிப்பை பாதியில் நிறுத்திய, 16 - 18 வயதினருக்கு, திறந்தவெளி பல்கலையில் படிப்பை தொடர ஏற்பாடு செய்யப்படும்.அவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டம், இந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.