சென்னை :'இன்ஜினியரிங் மாணவர்களுக்கான தேர்வு நேரத்தில் பேராசிரியர்கள், கல்லுாரிகளில் பணியில் இருக்க வேண்டும்' என, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.அண்ணா பல்கலையின் சார்பில், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதையடுத்து, மறுதேர்வு நடத்த அரசு உத்தரவிட்டது.இந்த தேர்வு, இந்த மாதம் 21ம் தேதி துவங்கியது. ஜூலை 14 வரை தேர்வு நடக்கிறது. வழக்கமான நிகழ்நிலை, 'ஆன்லைன்' தேர்வுக்கு பதில், மூன்று மணி நேர எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது.

மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதி, அதன்பின் ஆன்லைனில் விடைத்தாள் பிரதியை அனுப்ப வேண்டும் என, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகள், வளாக கல்லுாரிகள் மற்றும் தன்னாட்சி அல்லாத இணைப்பு கல்லுாரிகளுக்கு, பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வு பணியில் உள்ள பேராசிரியர்கள், தேர்வில் முறைகேடுகள் ஏற்படாமல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்வு நேரத்தில் பேராசிரியர்கள், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில், கட்டாயம் பணியில் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.