புதுடில்லி-'கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு கொடுக்கப்படும் பல மருந்துகளை, குழந்தைகளுக்கு வழங்க எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை' என, மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சை குறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:கொரோனா இரண்டாவது அலை தற்போது குறைந்துள்ளது. எனினும், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.நாட்டில், கொரோனா முதல் அலை பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம், இரண்டாவது அலையின் பரவல் அதிகரித்தது.

அதனால், சில மாத இடைவெளியில், மூன்றாவது அலை பரவலாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே இதை எதிர்கொள்ள, அனைத்து தரப்பினரும் தயாராக இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பிலிருந்து, குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.தொற்றால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு சிகிச்சையளிக்க வழங்கப்படும், 'இர்மெக்டின், ஹைட்ராசிகுளோரோக்வின், பேவிபிரவிர், டாக்சிசைகிளின், அசித்ரோ மைசின்' போன்ற மருந்துகளை, தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்படவில்லை.


தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க, தேவையான வசதிகளை செய்ய வேண்டும். 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போட அனுமதி கிடைத்தவுடன், குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.