புதுடில்லி:கொரோனா நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய, '2டிஜி' மருந்தை, யார் யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து, அதை தயாரித்துள்ள டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு, மிதமான பாதிப்பு உள்ளோருக்கு வழங்குவதற்காக, '2டிஜி' என்ற தடுப்பு மருந்தை, டி.ஆர்.டி.ஓ., கண்டுபிடித்துள்ளது. 'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த மருந்துக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த மருந்தை யார் யாருக்கு கொடுக்கலாம் என்பது குறித்து, டி.ஆர்.டி.ஓ., விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பொடி வடிவிலான இந்த மருந்தை, மிதமானது முதல், சற்று அதிக பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு, அதிகபட்சம், 10 நாள் வழங்கலாம். டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும்.

கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு, தீவிர இதய பிரச்னை, கடுமையான மூச்சு திணறல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த மருந்து வழங்க வேண்டாம். கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கும் வழங்கக் கூடாது. அதேபோல், 18 வயதுக்குட்பட்டவருக்கும் இந்த மருந்து தரக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.