சென்னை:அண்ணா பல்கலை மாணவர்களுக்கான மறுதேர்வு, நாளை துவங்குகிறது. இதில், காப்பி அடிக்காமல் தேர்வு எழுத, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை வழியே, செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, 2020 டிசம்பர் மாத தேர்வு, பிப்ரவரியில், 'ஆன்லைன்' முறையில் நடந்தது. மாணவர்கள் தேர்வு எழுதும் போதே, அவர்களது, 'லேப்டாப்' மற்றும் கணினி, மொபைல்போன் ஆகியவற்றில் உள்ள கேமராக்களில், மாணவர்களின் நடவடிக்கைகள் பதிவாகும்.

முறைகேடு புகார்

இந்த தேர்வின் போது, பல மாணவர்களின் கண் அசைவுகள் வேறு பக்கம் திரும்பியதால், அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கணினியில் பதிவானது. இதையடுத்து, தேர்வு முடிவு வெளியாகும் போது, நான்கு லட்சம் பேரில், 30 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இந்த விவகாரம், மாணவர்கள் மற்றும் கல்லுாரிகள் இடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்வு நடத்தும் முறையை மாற்ற வேண்டும் என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. தி.மு.க., அரசு அமைந்ததும், உயர் கல்வி அமைச்சர் பொன்முடியிடம், மாணவர்கள் மனு அளித்தனர்.இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலை மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப் படும் என்றும், மூன்று மணி நேர எழுத்து தேர்வாக நடத்தப்படும் என்றும், வீட்டில் இருந்து தேர்வு எழுதி, ஆன்லைனில் நகலை அனுப்பினால் போதும் என்றும், உயர் கல்வித்துறை அறிவித்தது.

மூன்று மணி நேரம்

இதன்படி மறுதேர்வானது, நாளை துவங்க உள்ளது. காலை மற்றும் பிற்பகலில் தேர்வுகள் நடக்கும். தேர்வு துவங்கும் நேரத்திற்கு முன், ஆன்லைனில் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். மூன்று மணி நேரம் தேர்வு எழுதி முடிந்ததும், தங்களின் கல்லுாரி குறிப்பிடும், 'ஆன்லைன்' தளத்தில் விடைத்தாளை, 'ஸ்கேன்' செய்து அல்லது புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்.

அனுப்பப்பட்ட விடைத்தாளை, பின் தங்களின் இன்ஜி., கல்லுாரி முகவரிக்கு, மாணவர்கள் தபாலில் அனுப்ப வேண்டும். ஆன்லைனில் அனுப்பிய விடைத்தாளுக்கும், தபாலில் பெறப்படும் விடைத்தாளுக்கும் வித்தியாசம் இருந்தால், முறைகேடு செய்ததாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் மாணவர்கள், முழு ஈடுபாட்டுடன், 'காப்பி' அடிக்காமல், குழுவாக சேராமல், கலந்து பேசாமல் நேர்மையாக விடைகளை எழுத வேண்டும். தேர்வு குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால், விசாரணை நடத்தப்படும் என, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.