கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக மூடிக் கிடக்கின்றன. ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாமல் மாதாமாதம் சரியாக அவர்கள் கணக்கில் அரசு செலுத்தி வருகிறது. பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் இந்த ஊரடங்கு காலத்தில் அவர்களால் ஓரளவு செலவுகளைச் செய்ய முடிகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் வேலை பார்த்துவந்த ஆசிரியர்களின் பாடு தான் திண்டாட்டமாக இருக்கிறது.


கொரோனா காலம் என்பதால் தனியார் பள்ளிகள் 75 சதவீத கல்விக் கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கொரோனாவைக் காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படியே கொடுத்தாலும் பெருமளவு பிடித்துக்கொண்டு தான் கொடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரத்திற்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கும் கோரிக்கை வைத்தனர்.


 

இச்சூழலில் இதுதொடர்பாகப் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை என்னால் உணரமுடிகிறது. ஆசிரியர்கள் சிலரே இதுகுறித்து என்னிடம் பேசினார்கள். தனியார் பள்ளியில் இந்த பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது பெயிண்டிங் வேலை செய்கிறேன் என்று சில ஆசிரியர்களே வீடியோவை எடுத்து அனுப்புகிறார்கள். இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துச்சென்று, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.