கோவை:அரசுப்பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் நியமிக்காததால், பல மாதங்களாக பூட்டியிருந்த வகுப்பறை, வளாகத்தை எப்படி சுத்தம் செய்வது என, தலைமையாசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.புதிய கல்வியாண்டுக்கு ஆயத்தமாகும் வகையில், தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மட்டும், வரும் 14ம் தேதி முதல் பள்ளிக்கு செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.இதோடு, புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை கொண்டு வந்து வளாகத்தில் வைக்கவும், சேர்க்கை பணிகளை துவங்கும் வகையில், வகுப்பறைகள், வளாகங்களை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்டு பின், அலுவலக பணிகளுக்கு மட்டும் அவ்வப்போது திறக்கப்பட்டது. மேற்கூரை ஒழுகிய நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களின் வகுப்பறைகள், பராமரிப்பின்றி உள்ளன. அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'அவுட்சோர்சிங் முறையில், துாய்ைம பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக, கடந்த ஆட்சியில் உறுதியளிக்கப்பட்டது. செயல்படுத்தவில்லை. பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தொகுப்பூதிய பணியாளர்களும் வேலைக்கு வருவதில்லை. எனவே, மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களை கொண்டு, வகுப்பறைகளை சுத்தம் செய்ய ஆவன செய்ய வேண்டும்' என்றனர்.இதற்கிடையே, பொது போக்குவரத்து இல்லாத போது, நீண்ட தொலைவில் இருப்போர், பள்ளிக்கு எப்படி வர முடியும் என, பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபிறகு, சேர்க்கை பணிகள் நடத்தி கொள்ளலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.