சென்னை:'கொரோனா தடுப்பு பணிக்கு அழைத்தால், அதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது' என, ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த பணியில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி துறையினரையும் பயன்படுத்தி கொள்ள, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது.


இதன்படி, பல இடங்களில், கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள், கொரோனா நோயாளிகளின் தகவல் தொகுப்பு சேகரிப்பு பணி போன்றவை, அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பல மாவட்டங்களில், கலெக்டர் ஒதுக்கும் பணிகளுக்கு செல்ல, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மறுப்பு தெரிவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.


இதுகுறித்து, பள்ளி கல்வி செயலகத்துக்கு தகவல்கள் வந்ததை அடுத்து, பள்ளி கல்வி அலுவலர்களுக்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'மாவட்ட கலெக்டர் அலுவலகம், கொரோனா தடுப்பு பணிக்கு செல்ல அறிவுறுத்தினால், ஆசிரியர்கள், அலுவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க கூடாது. உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.