கொரோனா பாதிப்பு , உள்ளாட்சி தேர்தல், திட்டம்

 சென்னை :கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரகம், நகர்புறம் என, இரு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. பல மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.அதேபோல, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கவில்லை. மீதமுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் 2019 டிசம்பரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர்.


விடுபட்ட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது, பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தள்ளிக்கொண்டே சென்றது. சட்டசபை தேர்தலுடன் நகர்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.கொரோனா பரவல் காரணமாக, இந்த திட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் தள்ளிவைத்து விட்டது. தேர்தல் நடத்தப்படாததால், சிறப்பு அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வருகின்றனர்.


இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பழனிகுமார் பொறுப்பேற்றுள்ளார்.மாநிலம் முழுதும் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில், அரசு கவனம் செலுத்தி வருகிறது. பாதிப்பு, வரும் நாட்களில் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததும், நகர்புற உள்ளாட்சி தேர்தலுடன் 10 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.


இதற்காக, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து, தேர்தல் முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் துவக்க உள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும்கட்சியான தி.மு.க., நகர பகுதிகளில் அதிக ஓட்டுக்களை அள்ளியது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அக்கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.