பிளஸ் 2 மதிப்பெண் நிர்ணயம் குறித்த குழப்பத்திற்கு தமிழக அரசு தற்போது ஒரு தீர்வு அளித்துள்ள நிலையில், அடுத்ததாக உயர்கல்வி படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த சிந்தனையில் மாணவர்களும், பெற்றோரும் இறங்கியுள்ளனர்.


வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் சூழலில், வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும், உயர்கல்விக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய விதம் குறித்தும் இங்கே விளக்குகின்றனர் கல்வியாளர்கள்.


'ரோபோட்டிக்ஸ்'அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தின் தேர்வுத்துறை துணை கட்டுப்பாட்டாளர் மகேஸ்வர சைத்தன்யா கூறியதாவது:


முன்பிருந்த பாரம்பரிய கல்வி முறையிலிருந்து, உயர்கல்வி இன்று புதிய மாற்றத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்ஜினியரிங் மாணவர்கள் மட்டுமல்லாது, எந்த துறை மாணவர்களாக இருந்தாலும், பிற துறைகள் சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது மிக அவசியம்.


கம்ப்யூட்டர் சார்ந்த அறிவு மற்றும் சிறந்த தொடர்பியல் திறன் ஆகிய வற்றை உள்ளடக்கிய 21ம் நுாற்றாண்டு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, மருத்துவர்கள் இன்று 'ரோபோட்டிக்ஸ்' உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதால், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையுடன், ரோபோட்டிக்ஸ் குறித்த அறிவு அவசியமாகிறது.


வங்கிகளில் பணிபுரியும் வணிகவியல் பட்டதாரிகளுக்கு, 'ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மிஷின் லேர்னிங்' குறித்த அறிவு தேவைப்படுவதால், அவை குறித்த திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. 'இன்டர்ன்ஷிப்'தகவல்களை பகுப்பாய்தல் மற்றும் அவற்றை தெளிவாக விவரிக்கும் திறன்களும் இன்று கூடுதலாக எதிர்பார்க்கப்படுகின்றன.


இவ்வாறு எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் இதர துறை அறிவும், தொழில்நுட்பமும் அங்கே முக்கிய பங்கு வகிக்கிறது. வகுப்பறையில் கற்பதை செயல் வடிவமாக்கவும், சிறந்த வேலைவாய்ப்பிற்கும், தொழிற்துறை நிறுவனங்களில் நேரடி பயிற்சி மிக அவசியம் என்பதற்காக, அனைத்து தொழில்நுட்ப மாணவர்களுக்கும், 'இன்டர்ன்ஷிப்'பை ஏ.ஐ.சி.டி.இ., கட்டாயமாக்கியுள்ளது.


மேலும், செயல்முறை பயிற்சியுடன், பிரச்னைகளை கண்டறிதல், சவால்களுக்கு உரிய தீர்வு காணுதல், புத்தாக்க சிந்தனை, குழுவாக இணைந்து செயல்படுதல் போன்ற குணநலன்களுடன் சமுதாய நலனுக்காக செயல்படும் பண்பும் முக்கியம்.


'இன்ஜினியரிங் மட்டுமல்லாது, பைனான்ஸ், இன்ஷூரன்ஸ், மாஸ் கம்யூனிகேஷன்' என பல்வேறு துறைகள் நன்கு வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், எந்த துறையாக இருந்தாலும் தொடர் கற்றல், திறன் மேம்பாடு, தன்னம்பிக்கை போன்ற குணநலன்களை, ஒவ்வொரு மாணவரும் உரித்தாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


'இன்குபேஷன்'இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் துணைவேந்தர் ஸ்ரீதரா கூறியதாவது:


இன்று மாணவர்கள் வேலை வாய்ப்புமிக்க கல்வியை எதிர்நோக்கியே, பாடப்பிரிவை தேர்வு செய்ய முற்படுவதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்ந்த படிப்பை பலரும் தேர்வு செய்கின்றனர். 'மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ்' துறைகளுக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.அதிகப்படியான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய சூழலில், 'சிவில், ஆர்க்கிடெக்சர் படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.


இன்றைய காலகட்டத்தில் பல துறைகள் இணைந்தே செயல்பட முடியும் என்பதாலும், ஏ.ஐ., போன்ற தொழில்நுட்ப திறன் அனைத்து துறைகளுக்கும் மிகவும் அவசியம் என்பதாலும், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள், இதர பிற துறைகளிலும் சேர்க்கப் படுகின்றன. 'மெக்கட்ரானிக்ஸ், ஆட்டோடிரானிக்ஸ்' போன்று இரண்டு மூன்று துறைகள் இணைந்து புதிய துறையாக உருவெடுத்து உள்ளன.


மாணவர்களின் புத்தாக்க சிந்தனைகளை துாண்டுவதற்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் 'இன்குபேஷன்' மையங்கள் கல்வி நிறுவனங்களிலேயே ஏற்படுத்தப்படுகின்றன. நிபுணர்களின் நேரடி ஆலோசனைகளுடன் அங்கு தங்களது 'புராஜெக்ட்'டுகளை மேம்படுத்தலாம்; புதிய பொருள் உருவாக்கலாம்; சந்தைப்படுத்தலாம்.


இதுபோன்று மாணவர்களின் அனைத்து திறன் வளர்ப்புக்கும் கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், மாணவர்கள் அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது, உலகின் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


'சென்டர் ஆப் எக்சலென்ஸ்'புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி முதல்வர் பிரதீப் தேவநேயன் கூறியதாவது:


உலக அளவில் கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினாலும், பல சாதகமான வாய்ப்புகளையும் நமக்கு அளித்துள்ளன. 'ஆன்லைன்' கல்வி முறை நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. ஊரடங்கு காலத்திலும் ஐ.டி., துறை மட்டுமல்லாது, பிற துறை தொழில் நிறுவனங்களும் சிறப்பாக செயல்படுகின்றன. வீட்டில் இருந்தே கற்றல் மற்றும் பணி செய்தல் போன்ற மாற்றத்தையும் நம்மிடம் புகுத்தியுள்ளது.


அலுவலகம் என்ற சூழல் தற்போது அவசியமில்லை என்ற படிப்பினையையும் நமக்கு கற்றுக் கொடுத்து உள்ளது. மாணவர்கள் தங்களது குறிக்கோளை நோக்கிய பயணத்திற்கு தொடர்ந்து தயாராக வேண்டும். எந்த துறையில் சாதிக்க முற்பட்டாலும், தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிதாக பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது தான் புதிய சிந்தனைகள் வளரும். புதிய கண்டுபிடிப்புகள் நிகழும்.


நமக்கு எந்த சவால்களும் இல்லை என்றால், எந்த கண்டுபிடிப்புகளுக்கும் முயற்சி செய்ய மாட்டோம்.அரசு அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், 'சென்டர் ஆப் எக்சலென்ஸ், இன்குபேஷன் சென்டர்' நடத்தும் பல்வேறு போட்டிகளில் துடிப்புடன் பங்கேற்க வேண்டும். கிராமப்புற மாணவர்களாக இருந்தாலும் சரி, நகர்ப்புற மாணவர்களாக இருந்தாலும் சரி, ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக் கொள்வதும் நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -