புதுடில்லி:'உலகம் முழுதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், அவை வீணாவதை குறைத்தால் தான், இன்னும் நிறைய பேருக்கு தடுப்பூசி போட முடியும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தடுப்பூசி வீணாவதை, 1 சதவீதத்துக்கும் குறைவானதாக்க வேண்டும் என, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது; இது நியாயமான, மிக தேவையான, சாதிக்க கூடிய வேண்டுகோள் தான்.


தடுப்பூசி தயாரிப்புக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது. எனவே, பெரும்பாலான நேரங்களில், வினியோகத்தை காட்டிலும், தேவை அதிகமாக உள்ளது.கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வர வேண்டுமானால், தடுப்பூசி என்ற ஆயுதத்தை நியாயமாகவும், உகந்த தாகவும் நாம் பயன்படுத்த வேண்டும்.உலக அளவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதால், அவை வீணாவதை குறைப்பதன் வாயிலாக, இன்னும் நிறைய பேருக்கு தடுப்பூசி போட முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.