சென்னை:'அரசியல் நடவடிக்கைகளை பார்த்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' இலவச பயிற்சியை நிறுத்திவிட வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு அமைந்த பின், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், நீட் தேர்வு குறித்து தெளிவான நிலைப்பாடு எடுக்காததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். அதே நிலையை, தி.மு.க., அரசும் கையில் எடுத்துள்ளது.


குறிப்பாக, 'நீட் தேர்வு வேண்டாம்; தேர்வை அனுமதிக்க மாட்டோம்; நீட் தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம்' என, தமிழக அமைச்சர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் நீட் தேர்வு நடக்க வாய்ப்பில்லை என, ஒரு தரப்பினர் தகவல்களை பரப்பினர்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நடந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் திடீரென பயிற்சி நிறுத்தப்பட்டது. அதனால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படுமோ என, மாணவர்கள் கருதினர்.இந்நிலையில், அரசு பள்ளிகளின் நீட் பயிற்சி ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.


அதன் விபரம்:அரசு பள்ளி மாணவர்களுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட நீட் இலவச பயிற்சியை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம். அரசியல் நடவடிக்கைகளை பார்த்து, நீட் தேர்வு குறித்து தவறாக முடிவு செய்ய வேண்டாம்.பயிற்சியை நிறுத்தினால், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் தங்களுக்கான உள் ஒதுக்கீட்டில் சேர முடியாத நிலை ஏற்படும்.


எனவே, தற்போது பிளஸ் 2 முடித்து பயிற்சியில் உள்ள மாணவர்களுக்கு, தொடர்ந்து ஆன்லைனில் இலவச பயிற்சியை அளிக்க வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள் மீண்டும் துவக்கி உள்ளனர்.