9ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ஏதும் நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.


பள்ளிக் கல்வித்துறை இதுவரை மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிடாமல் இருப்பதால் உயர்கல்வி சேர்க்கையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால், எதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் எடுத்து கொள்ளப்படும். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல்வருடன் ஆலோசித்த பின்னர் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும். சேலம் பெரியார், மதுரை காமராஜர், அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் நியமன முறைகேடு பற்றி விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, என்றும் அவர் கூறியுள்ளார்.