சென்னை:அரசு அலுவலகங்கள், குறைந்த எண்ணிக்கையில் செயல்பட அனுமதி அளித்த நிலையில், அரசு, 'இ - சேவை' மையங்கள், பொதுமக்களின் தேவைக்காக திறக்கப்பட்டு உள்ளன.


இது குறித்து அரசு கேபிள் 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பரவல் காரணமாக, அரசு இ - சேவை மையங்கள், தற்காலிகமாக மூடப்பட்டன. 30 சதவீத ஊழியர்களுடன், அரசு அலுவல கங்கள் செயல்பட, அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அனைத்து அரசு இ - சேவை மையங்களையும் திறந்து, மக்களுக்கு சேவை வழங்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.


இருந்தாலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அனுமதி பெற்று, செயல்பட அறுவுறுத்தப்பட்டு உள்ளது. தாலுகா மற்றும் மண்டல அலுவலகங்களில், இரண்டு, 'கவுன்டர்'கள் இருந்தால், அதில் ஒன்று மட்டுமே முழு நேரம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு கவுன்டர் மட்டும் உள்ள பிற பகுதி சேவை மையங்கள், பிற்பகல் வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.


'ஆதார்' உட்பட அனைத்து சேவைகளும் வழங்கப்படுகின்றன. பொது மக்கள், இ - சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.