சென்னை : 'பள்ளி ஆன்லைன் வகுப்புகளில் கண்ணியமாக உடை அணிய வேண்டும்' என, தமிழக அரசின் விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வழி வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில், பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில், விதிகள் தயாரிப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தயாரித்துள்ள விதிமுறைகளுக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.விதிமுறைகள் என்ன? அனைத்து பாட திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளுக்கும், அரசின் விதிமுறைகள் பொருந்தும். பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும். இக்குழுவில், தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தலா இருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் பள்ளி சாரா வெளிநபர் ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பர்.


 குறைகளை தெரிவிக்க, மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு மையமும், தொலைபேசி மற்றும் இ- - மெயில் வசதியும், ஒரு மாதத்தில் துவங்கப்படும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு, தங்களுக்கு வரும் புகாரை மாநில கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க வேண்டும் இந்த மையத்தில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் ரகசியமாக இருக்கும் ஆன்லைன் வழி வகுப்பில், ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்பறை சூழலுக்கு ஏற்ப கண்ணியமாக உடை அணிய வேண்டும்  ஆன்லைன் வகுப்பு நிகழ்வை முழுமையாக பதிவு செய்து, ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டி அமைக்கப்படும்.


 மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு, மாணவர்களிடம் பெற்ற கருத்துக்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களை பதிவு செய்ய பதிவேடு பராமரிக்கப்படும். நவம்பர், 15 முதல், 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலை தடுக்கும் வாரம் கடைப்பிடிக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.