சென்னை:கறுப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு, வீடு திரும்பிய அனைவரது உடல் நிலையையும் தொடர்ந்து கண்காணிக்க, மருத்துவமனைகளுக்கு, பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:கொரோனா நோயாளிகளுக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, அதை அறிவிக்கப்பட்ட நோயாக, மாநில அரசு பிரகடனப் படுத்தி உள்ளது. இதற்கிடையே பாதிப்பை தடுப்பதற்காக, மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய சிறப்பு செயல் திட்ட குழுவும் அமைக்கப்பட்டது.


இக்குழுவின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அதனடிப்படையில், டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு, சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.அதன் விபரம்: கொரோனாவில் இருந்து விடுபட்டு, வீடு திரும்பிய அனைத்து நோயாளிகளின் உடல் நிலையையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.


அதில், எவருக்கேனும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டால், உடனடியாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்


* முறையற்ற, 'ஸ்டிராய்டு' மருந்து பயன்பாடு, கறுப்பு பூஞ்சை நோய்க்கு முக்கிய காரணம். அதனால், நோய்க்கான சிகிச்சை வழிகாட்டி முறைகளும் வெளியிடப்பட்டுள்ளன


* 'சைனஸ்' பாதை, மூளையை பாதிக்கும் பூஞ்சை, நுரையீரல் பூஞ்சை, ஜீரண மண்டல பூஞ்சை, தோல் பகுதிகளில் ஏற்படும் பூஞ்சை, உடல் முழுதும் ஏற்படும் பூஞ்சை என, ஐந்து வகையான கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது


* கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயுள்ளவர்கள், உடலுறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள், நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றவர்களுக்கு, கறுப்பு பூஞ்சை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்


* மூச்சுவிட சிரமம், மூக்கில் இருந்து கறுப்பான திரவமோ அல்லது ரத்தமோ வடிதல், மூக்கு, கண் பகுதிகள் சிவப்பாகவோ, கறுப்பாகவோ மாறுதல், தலைவலி, காய்ச்சல், ரத்தம் கலந்த வாந்தி, அதீத மூக்கடைப்பு, திடீர் பார்வை குறைபாடு என, 50க்கும் மேற்பட்ட அறிகுறிகள் தென்படலாம்


* அவ்வாறு உள்ள நோயாளிகளுக்கு, உடனடியாக ரத்த பரிசோதனைகளும், பூஞ்சையை கண்டறிவதற்கான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், உடனடியாக சிகிச்சைகளை துவங்குதல் அவசியம்


* நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகளை, தொடர்ந்து உட்கொண்டு வரும் நோயாளிகளை, உடனடியாக நிறுத்த சொல்ல வேண்டும். அதன்பின் தேவையான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். அதனுடன், 'ஆம்போடெரிசின் பி' அல்லது 'பொசக்னோசோல், ஐசாலுக்னோசோல்' மருந்துகள் வாயிலாக சிகிச்சை அளிக்க வேண்டும்


* முக கவசம் அணிவதை மிக தீவிரமாக பயன்படுத்தினால், கறுப்பு பூஞ்சை வராமல் காக்க முடியும். சர்க்கரை அளவு கட்டுப்பாடு, நோய் எதிர்ப்பாற்றல் மருந்துகளை முறையாக பயன் படுத்துதல் உள்ளிட்டவற்றை நோயாளிகளிடம், டாக்டர்கள் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.