அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் போடும் பணி இருப்பதால் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சுழற்றி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து 50 சதவீத ஆசிரியர்கள் வாரத்தில் 3 நாட்களும் அடுத்த 50 சதவீத ஆசிரியர்கள் அடுத்த 3 நாட்களுக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் கொரோனாவை காரணம் காட்டி வெளியூர் சென்றுவிட்ட நிலையில் பணிக்கு திரும்பவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதனால் ஒரு குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். அதனால், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆசிரியர்களே பள்ளிக்கு வருவது நீடிக்கிறது. இதனால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இது  குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல முறை வலியுறுத்தியும் பல ஆசிரியர்கள் வெளியூரில் இருப்பதாக தகவல் தெரிவித்து பள்ளிக்கு வராமல் உள்ளனர். இந்நிலையில் தான், அனைத்து ஆசிரியர்களும் 9 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பணிக்கு வராமல் உள்ள ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.