சென்னை:வெப்ப சலனத்தால், ஒன்பது மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை மிதமான நிலையில் பெய்கிறது. வெப்ப சலன மழை மட்டும் அவ்வப்போது பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் மழையின்றி, வெயில் அதிகரித்து உள்ளது.நேற்று மாநிலம் முழுதும் பரவலாக வெயில் கொளுத்தியது. மாலை நிலவரப்படி, மதுரை, திருச்சி, வேலுார், தர்மபுரி, கரூர் பரமத்தி, சேலம், திருத்தணி உட்பட ஏழு இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவான, 38 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக வெப்பநிலை பதிவானது.

மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை, திருச்சி மற்றும் வேலுாரில், 40 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.இன்றைய வானிலை குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், வெப்ப சலனம் காரணமாக, இடி, மின்னலுடன் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்; மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில், காலை நேரங்களில் வானம் தெளிவாகவும், மாலையில் மேக மூட்டமாகவும் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.