உலகில் உயிர்வாழும் சிறு பூச்சியில் இருந்து யானைகள் வரை அனைத்து உயிரினத்திற்கும் இந்த பிரபஞ்சத்தில் பெரும்பங்கு உண்டு. ஆறு அறிவுடன் இயற்கையை வெல்ல நினைக்கும் மனிதர்களாகிய நம்மால் இந்த பங்கினை பெரும்பாலான சமயங்களில் தெரிந்து கொள்ள முடியாததால்தான் இயற்கை பேரழிவு நிகழ்கிறது.இதற்கான உதாரணம்தான் அமெரிக்காவில் 8991 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளயெல்லோ ஸ்டோன் தேசிய பூங்கா. அங்கு எரிமலைகள், சுடுநீர் ஊற்றுகள், அடர்ந்த காடுகள், ஏரிகள், வற்றா ஆறுகள், சாம்பல் நிற ஓநாய்கள், கருப்புக் கரடிகள், கிரிஸ்லி கரடிகள், நாய் இனத்தை சேர்ந்த கயோட்டிகள், காட்டு எருதுகள், 'எல்க்' மற்றும் 'மூஸ்' இன மான்கள், ஏராளமான பறவையினங்கள், ஊர்வனங்கள் இருந்தன.

ஆறுகள் வறண்டன

சாம்பல் நிற ஓநாய்கள் அங்குள்ள மான்களையும், வனத்திற்கு அருகாமையில் இருந்த கால்நடைகளையும் அச்சுறுத்தவும், வேட்டையாடவும் தொடங்கின. இதனால் ஓநாய்களை முழுமையாக சுட்டுக்கொல்ல 1914ல் வன அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி 1926ல் கடைசி ஓநாயும் சுட்டுக் கொல்லப்பட்டது.ஓநாய்கள் அழிக்கப்பட்ட சில ஆண்டுகளில் 'யெல்லோ ஸ்டோன்' பகுதியில் உள்ள ஆறுகள் வறண்டன. காரணத்தை அறிய விஞ்ஞானிகள் முயற்சித்தபோது ஓநாய்கள் இல்லாததால் 'எல்க்' மான்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியது தெரிந்தது. அவை பயமின்றி ஒரே இடத்தில் மேயத் தொடங்கின. இதனால் அவ்வனப்பகுதியின் பள்ளத்தாக்குகளில் பிரதானமான ஆஸ்பென், வில்லோ, கார்டன் உட் போன்ற மரங்கள் அழியத் தொடங்கின.

இதனால் நிலச்சரிவு, சூழல் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இம்மரக்கன்றுகளை கொண்டு ''பீவர்'' என்னும் எலியினத்தை சேர்ந்த உயிரினம் அணைக்கட்டி உயிர்வாழ்ந்த சூழ்நிலையும் முடிவுக்கு வந்தது. இக்காரணங்களால் யெல்லோ ஸ்டோன் வனப்பகுதியில் ஓடிய ஆறுகள் வறண்டன. இவ்வாறு இயற்கை சூழலியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு உயிரினத்தை இழக்கும்போது ஏற்படக்கூடிய பேரழிவு 'டிராபிக் கேஸ்கேட்' எனப்படுகிறது.1996ல் பிற வனப்பகுதிகளில் இருந்து சாம்பல் நிற ஓநாய்கள் இங்கு மறு அறிமுகம் செய்யப்பட்டன. ஓநாய்கள் மீண்டும் வந்த 6 ஆண்டுகளில் 'எல்க்' மான்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்தது.

மரங்களின் வளர்ச்சி அதிகரித்தது, நிலச்சரிவுகள் குறைந்தது.' பீவர்கள்' எண்ணிக்கை பெருகியது மட்டுமின்றி அவைகளால் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளால் நிலத்தடி நீரும் ஆறுகளும் உயிர் பெற்றன. கரடிகள், கயோட்டிகள், நரிகள், பறவைகள் பெருகி பல்லுயிர் பெருக்கமே அரங்கேறியது. ஆகவே ஓநாய்கள் இக்காடுகளுக்கும் அவற்றில் உருவாகும் நதிகளுக்கும் இன்றியமையாதவைகளாய் இருக்கிறது.

உணவுச்சங்கிலி

இதுபோன்று நம் இந்திய வனப்பகுதிகளில் உணவுச் சங்கிலி தலையாய நிலையில் உள்ளதற்கு முக்கிய காரணமாக அமைந்த விலங்கு புலி. புலிகள் ஒரு காட்டின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. புலிகள் தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால் காட்டின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது மட்டுமின்றி காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் காப்பாற்றுகிறது.நுாறு ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் வெறும் 1706 ஆக குறைந்தது. புலிகளால் தான் காடுகள் வளம் பெற முடியும். காடுகள் வளம் பெற்றால்தான் நதிகள் வற்றாத ஜீவநதிகளாகும். நீர் இருந்தால் தான் மனிதன் உயிர் வாழ முடியும் என்பதை உணர்ந்த இந்திய அரசு 1973ல் 'ப்ராஜக்ட் டைகர்' என்னும் அமைப்பின் மூலமாக முதலில் 9 புலிகள் சரணாலயத்தை உருவாக்கியது. தற்பொழுது தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியத்தின் கீழ் இந்தியாவில் 51 புலிகள் சரணாலயங்கள் பராமரிக்கப்படுகின்றன. 2018 ல் இந்தியாவில் நடத்தப்பட்ட 'கேமரா டிராப்'கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு கின்னஸ் புகழ்பெற்றது. இதில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை சரிவில் இருந்து மீண்டும் 2967 ஆக உயர்ந்தது.

21.34 சதவீதம் காடுகள்

இன்று உலகில் 21.34 சதவீதம் காடுகளாக இருப்பினும், இவற்றில் 4.93 சதவீதம் மட்டுமே வன உயிரினங்கள் வாழக்கூடிய பாதுகாக்கப்பட்ட காடுகளாக திகழ்கிறது. உலக மக்கள் தொகையில் 16.7 சதவீதத்தினர் இந்தியாவில் இருப்பினும், 51 புலிகள் சரணாலயங்களில் பரப்பளவு 2.2 சதவீதம் மட்டுமே. மனிதகுலம் நோயற்று என்றும் ஆரோக்கியமாக வாழ காடுகள் முக்கியம் என்பதால் ஒவ்வொரு நாளும் இக்காடுகளின் மேலான மனித தாக்கம் அதிகரித்துள்ளது. 2018ல் தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியத்துடன் இணைந்து இந்திய காடுகள் மேலாண்மை நிறுவனம் காடுகளும் பொருளாதாரமும் என்ற ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டது. அந்த ஆய்வில் இந்தியாவில் 10 புலிகள் சரணாலயத்தின் பொருளாதாரத்தை மதிப்பீடு செய்தனர்.

சராசரியாக புலிகள் சரணாலய மேலாண்மைக்கு ஒரு ரூபாய் செலவு செய்வது 2500 ரூபாயிற்கான பலன்களை தருகிறது என்பது வியப்பு. இந்த ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 புலிகள் சரணாலயத்தின் மூலம் விலை மதிப்பீடு செய்யக்கூடிய, விலை மதிப்பீடு செய்ய முடியாத பலன்களாக ஒரு ஆண்டிற்கு ரூ.5.96 லட்சம் கோடி மதிப்புள்ள பலன்கள் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் 2019 -- 20 பட்ஜெட்டில் பொது நிறுவனங்களின் செலவில் 17.94 சதவீதமாகும்.புலிகள் சரணாலயங்கள் வாயிலாக பெறக்கூடிய விலை மதிப்பீடு செய்யக்கூடிய பலன்கள், வேலை வாய்ப்பு, சுற்றுலா வருமானம், கால்நடைத் தீவனம், காடு சார்ந்த பொருட்களின் விற்பனை, மீன் பிடிப்பு போன்றவையாகும். விலை மதிப்பீடு செய்ய முடியாத பலன்கள் புவி வெப்பமயமாதல் தடுப்பு, நதிகள் நீர் நிலைகள் பாதுகாப்பு, மண் வள பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்படுதல், மரபணுக்கள் பராமரிப்பு, மாசு கட்டுப்பாடு போன்றவை. உதாரணத்திற்கு இந்த 10 புலிகள் சரணாலயங்களின் மூலமாக பாதுகாக்கப்படும் நீர் மற்றும் நீர் நிலைகளில் பொருளாதார ஒப்பீடு ரூ.33,000 கோடியாகும். இது நீர்நிலை மேலாண்மைக்காக இந்திய அரசு புதிதாக தோற்றுவித்துள்ள 'ஜல்சக்தி' அமைச்சகத்தின் ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டை காட்டிலும் ரூ.4000 கோடி அதிகம்.

இன்றியமையாதது

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ரோடுகள், ரயில் பாதைகள், கனிமச் சுரங்கங்கள், தடுப்பணைகள் பணிமேற்கொள்வது காடுகளில் வற்றாத பொருளாதாரத்தை வற்ற செய்யக்கூடிய செயல்களாகும். புலிகள் வாழும் காட்டின் முக்கியத்துவத்தை அரசு ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளது. இன்று இந்தியாவில் உள்ள 2967 புலிகளில் 35 சதவீதம் சரணாலயத்திற்கு வெளியே உள்ள காடுகளில் வாழ்கின்றன. இந்த காடுகளுக்கும் புலிகள் சரணாலயத்திற்கு இணையான பாதுகாப்பு அளிப்பது இன்றியமையாது.-டாக்டர் சி.ப.ராஜ்குமார்உறுப்பினர், தமிழ்நாடு அரசு வன உயிரின வாரியம் drcpraj@nalamhospital.in