கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான வருகைப் பதிவு குறித்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதத் தொடக்கத்தில், ஜூன் 15 வரை அரசு ஊழியர்களுக்கு நெகிழ்வான வருகைப் பதிவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்த அவகாசம் முடிந்த நிலையில் தற்போது புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி50 சதவீத ஊழியர்கள் அலுவலகத்தில் பணியாற்றலாம் என்றும், மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி பணி செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறைகள் ஜூன் 16 முதல் ஜூன் 30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே பணி செய்யலாம். இதுபோல தொற்று அதிகமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வசிப்பவர்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டபகுதி பட்டியலிலிருந்து நீக்கப்படும்வரை வீட்டிலிருந்தே பணிபுரியலாம். அதேநேரம் அலுவலகத்துக்கு வந்து பணி செய்பவர்கள் அனைவரும் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.- பிடிஐ