சென்னை :''தமிழகத்தில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், குழந்தைகள் வார்டு துவங்கப்பட்டு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 1.30 கோடி ரூபாய் செலவில், ஒரு நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை எம்.எல்.ஏ., உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.

70 ஆயிரம் படுக்கைகள்

நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், எம்.பி., தயாநிதி, மருத்துவமனை இயக்குனர் மணி, மருத்துவ நிலைய அலுவலர் ஆனந்த் பிரதாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின், அமைச்சர் சுப்பிர மணியன் அளித்த பேட்டி:கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என, கூறப்படுகிறது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படாத தகவல் என, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழகம் முழுதும் 70 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப் பட்டுள்ளன.மூன்றாவது அலை வந்தாலும், அதை சமாளிக்க போதிய கட்டமைப்புகள் அரசிடம்

உள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் திறந்து வைக்கப்படுகின்றன.தமிழகத்தில் 1,737 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

4,000 குப்பிகள் கையிருப்பு

அனைத்து மருத்துவமனைகளிலும், கறுப்பு பூஞ்சைக்கான சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது. எனவே, அறிகுறி தெரிந்தவுடன், மருத்துவமனைக்கு வர வேண்டும்.இதற்கான மருத்துவ சிகிச்சையை பொறுத்தவரை, மூன்று வகையான மருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மத்திய அரசிடம்

'ஆம்போடெரிசின் -- பி' மருந்தில் 45 ஆயிரம் குப்பிகள் கேட்டிருந்தோம்; மத்திய அரசு, 11 ஆயிரத்து 796 குப்பிகளை அனுப்பியது. தற்போது 4,000 குப்பிகள் கையிருப்பில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

'கொரோனா தொற்று முடிவுக்கு வரும்'

''தமிழகத்தில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும்,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்திய அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தள்ளது. ஒரே நாளில் 25 ஆயிரத்து 550 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோரை காட்டிலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 56 ஆயிரத்து 550 படுக்கைகள் காலியாக உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1,000 ஆக இருந்தது. தற்போது 100 ஆக குறைந்துள்ளது. விரைவில், கொரோனா நோய் தொற்று முடிவுக்கு வரும்.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே ஐந்து லட்சத்து 97 ஆயிரத்து 418 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஐதராபாத், புனேவில் இருந்து 6 லட்சத்து 16 ஆயிரத்து 660 தடுப்பூசிகள் வர உள்ளன. அவை வந்தவுடன், ஐந்து மணி நேரத்தில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.