புதுச்சேரி-தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து, முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்துள்ளார்.புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் கிடையாது. புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு தமிழக பாடத்திட்டமும், ஏனாமிற்கு ஆந்திர பாடத்திட்டம்், மாகிக்கு கேரள பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இதனால், அந்தந்த மாநில கல்வித்துறை எடுக்கும் முடிவுகளையே புதுச்சேரி அரசு பின்பற்றி வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று அதிகரித்து வருவதால், தமிழக அரசு இந்தாண்டு பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து, கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது.அதை தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து, அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து முதல்வர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 52 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் உள்ள 150 பள்ளிகளில் படிக்கும் 12 ஆயிரத்து 674 மாணவ, மாணவியர், 2020-21ம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment