images%2B%25285%2529

மருத்துவம் பொறியியல் கலை அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்விக்கு +2 தேர்வு மதிப்பெண்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் அந்தந்த பள்ளிகள் அளவில் கொரோனா நோய்த்தொற்று தணிந்தபின் மருத்துவக் குழுவினர் அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படவேண்டும். 

புதிய காவிக்கொள்கையின் NEET, JEE உள்ளிட்ட கலை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான தகுதி அடிப்படையிலான எந்த நுழைவுத் தேர்வுகளையும் மாணவர்கள் கட்டாயம் எழுதிட அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வுகளில் காணப்படும் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு மோசடிகள், மதிப்பெண் குளறுபடிகள் அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

மாநில சுயாட்சி மற்றும் தன்னாட்சி கல்வி உரிமைகளில் ஒன்றிய அரசு குறுக்குவழிகளில் தலையிட்டு தமிழக மாணவர்கள் நலனையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அறமற்ற செயல்களுக்கு மாநில அரசும் அப்பாவி பொதுமக்களும் பெற்றோர்களும் மாணவர்களும் அடிபணியும் போக்கு பல்வேறு பின்விளைவுகளையே ஏற்படுத்தும். 

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகி விடக்கூடாது. சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கெதிரான புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் எப்படியாவது  நிறைவேற்றி தகுதியின் அடிப்படையில் தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி முடிய மாநில கல்வி வாரிய பாடத்திட்டம் சார்ந்த அனைத்து மாணவர் இட ஒதுக்கீடுகள் அடிப்படையிலான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நலன்களைப் புறந்தள்ளி இந்திய ஒன்றிய அளவில் பொது தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலமாக பிற மாநில மாணவர்களை வேண்டுமென்றே தமிழகத்தில் நுழைத்து தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. 

ஏனெனில் இந்திய ஒன்றிய அளவில் தமிழகத்தில் நிறுவப்பெற்றுள்ள கல்விக் கட்டமைப்பு உயரியது. இங்கு தான் மருத்துவம் பொறியியல் கல்விக்கான வாய்ப்புகள் மிகுதி. இவையனைத்தும் ஒவ்வொரு தமிழனின் வரி வருவாயில் பலமாகக் கட்டமைப்பு செய்யப்பட்டதாகும். தமிழ்ச்சமூகம் உலக அளவில் அறிவாலும் ஆற்றலாலும் பெருமை மிக்கது. 69 % இட ஒதுக்கீடு இங்கு மட்டும் தான் இருக்கிறது. மீண்டும் சாதி அடிப்படையிலான சனாதன, மநுதர்மத்தை நிறுவ, கல்வி நமது அடிப்படை பிறப்புரிமை எனும் இந்திய அரசியலமைப்பு விதியில் நடத்தப்படும் ஏழை, எளிய, அடித்தட்டு பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், தலித்துகள், பழங்குடியினர் மீதான மற்றுமொரு துல்லிய தாக்குதலாகப் புதிய கல்விக் கொள்கை முற்போக்கு கல்வியாளர்களால் நோக்கப்படுகிறது. 

ஒரே நாடு; ஒரே தகுதி நுழைவுத் தேர்வு என்பது சமூக நீதிக்கெதிரான மாபெரும் அநீதியாகும். பெரும் நோய்த்தொற்றுக் காலத்தில் ஒன்றிய அரசு முன்வைத்து வலியுறுத்தும் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், CBSC +2 தேர்வு ரத்து அறிவிப்பு போலன்றி கட்டாயம் எழுதிட அறிவுறுத்தும் நடவடிக்கைகள் குறுகிய நோக்கம் கொண்டது. இவற்றிற்கு தற்காலிக ஒத்திவைப்பு எதற்கு? உண்மையில் இவைதாம் ரத்து செய்யப்பட வேண்டியவை. 

எனவே, தமிழ்நாடு அரசு மாநில சுயாட்சியையும் கல்வியில் மாநிலத்திற்குரிய முழு உரிமையையும் கடமையையும் துளியளவும் விட்டுக் கொடுக்காமல் சொந்த மாநில மாணவர்கள் கல்வி மற்றும் உடல் நலனையும் கருத்தில் கொண்டு எல்லா வகையிலும் முக்கியத்துவம் நிறைந்த +2 பொதுத்தேர்வைக் கட்டாயம் நல்லதொரு சூழலில் நோய்த்தொற்று இல்லா ஒரு நன்னாளில் மருத்துவர் குழுவின் மேலான பரிந்துரைகளின் அடிப்படையில் செவ்வனே நடத்தி மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடுகள் அடிப்படையில் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கு வித்திடுதல் இன்றியமையாத ஒன்றாகும்.

தொடர்புக்கு

 7010303298