சென்னை :தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து, மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்தைக் கேட்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன் பின், தேர்வு நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பதை, இரண்டு நாட்களில் அறிவிக்கலாம் என, சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால், நாடு முழுதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொற்று பாதித்து, மருத்துவமனைகளிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டாம் அலையில், சிறு வயது குழந்தைகளும் பாதிப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்நிலையில், மாணவர்களின் உடல் நலன் மற்றும் உயிர் பாதுகாப்பு கருதி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. எனவே, மாநில அளவிலான தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு, மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண், மாணவர்களின் மேற்படிப்புக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என, அதிகாரிகள் தரப்பில், முதல்வரிடம் எடுத்து கூறப்பட்டது. அதேநேரம், மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இதையடுத்து, பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது குறித்து, அரசே நேரடியாக முடிவெடுக்காமல், பெற்றோர், ஆசிரியர், மாணவர் சங்க பிரதிநிதிகள், கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர் கருத்துகளை கேட்கலாம் என, தீர்மானிக்கப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில், இவ்விவகாரத்தில் இரண்டு நாட்களில் அரசு முடிவெடுக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர், தமிழக பள்ளி கல்வித் துறையின், இலவச உதவி எண், '14417' என்ற தொலைபேசியில், தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

அந்தக் கருத்துகள், உதவி மைய ஊழியர்களால் குறிப்பெடுக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கையாக தெரிவிக்கப்படும். அதேபோல், tnschooledu21@gmail.com என்ற, 'இ- - மெயில்' முகவரியிலும் கருத்துகளை பகிரலாம். ஆசிரியர், மாணவர், பெற்றோர், பள்ளி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கருத்துகளை, இரண்டு நாட்களில் தெரிவிக்க வேண்டும். அதன்பின், தேர்வு நடத்தப்படுமா, தள்ளி வைக்கப்படுமா, ரத்து செய்யப்படுமா என, அரசின் முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்

அமைச்சரின் சந்தேகம் இது!

பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள், தேர்வை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண்ணின் முக்கியத்துவம் குறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும், சி.பி.எஸ்.ஐ., பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, தேர்வை நடத்த வேண்டும் என்றாலும், மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என, முதல்வர் கூறியிருக்கிறார்.

எனவே, அனைத்து தரப்பினரின் கருத்துகள், பிற மாநிலங்களின் நிலைப்பாடுகள் ஆகியவற்றை அறிந்து, இரண்டு நாட்களில், பிளஸ் 2 தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என, முதல்வர் அறிவிப்பார். சி.பி.எஸ்.இ., தேர்வை ரத்து செய்ததுபோல், 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்திருக்க வேண்டும். இது, நுழைவு தேர்வுகளை நோக்கி, மறைமுகமாக மாணவர்களை திருப்பும் செயல் என்றும், சிலர் கூறியிருக்கின்றனர். அது குறித்தும் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு ரத்தானால் மதிப்பெண் வழங்குவது எப்படி?

பிளஸ் 2 தேர்வு ரத்தானால்,மதிப்பெண் வழங்குவது எப்படி என்பது குறித்து கருத்து தெரிவிக்க,முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.பிளஸ் 2 தேர்வு தொடர்பாக, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிளஸ் 2 பொது தேர்வு நடத்துவது குறித்து, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களை, இன்று 'ஆன்லைன்' வழியே தொடர்பு கொண்டு கருத்துகளை பெற வேண்டும்.

வற்றை அறிக்கையாக தயாரித்து, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப, தயாராக வைத்திருக்க வேண்டும்.தலைமை ஆசிரியர்கள் வழியே, அவரவர் பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கருத்துகளை கேட்டு, அதன் விபரத்தையும் தொகுத்து, முதன்மை கல்வி அலுவலகம் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தால், எந்த அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கலாம் என்பது குறித்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். அந்த விபரங்களையும் தொகுத்து வைத்திருக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.