மதுரை:'பாடத் திட்டம், நேரம் குறைப்பு உள்ளிட்ட சில மாற்றங்களுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும்' என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில தலைவர் சுரேஷ், பொது செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது. ஆனால் நீட் தேர்வு குறித்து அறிவிப்பு இல்லை. அதை மத்திய அரசு நடத்த வாய்ப்புள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டுமா வேண்டாமா என பெற்றோர், ஆசிரியர், கல்வியாளரிடம் இணையவழியில் கருத்துக்கேட்டு இன்றைக்குள் (ஜூன் 3) அறிக்கை அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவசரமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் சற்று தாமதித்து, பாடத் திட்டம், தேர்வு நேரம் குறைப்பு உள்ளிட்ட சில மாற்றங்களுடன் எந்த வழியிலாவது தேர்வு நடத்த வேண்டும். ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். இதில் துளியும் சமரசம் வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.