கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள் பெயரில் வைப்பீடு செய்வதுடன் மறுவாழ்வு, பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா காரணமாக பெற்றோரை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 29-ம் தேதி அறிவித்தார். அதில், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள், ஏற்கெனவே பெற்றோரில் ஒருவரை இழந்து தற்போது மற்றொருவரையும் இழந்த குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும். 18 வயதுநிறைவடைந்ததும் அந்த குழந்தைகளுக்கு வட்டியுடன் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் அதில் இடம் பெற்றிருந்தன.

அத்துடன், முதல்வர் அறிவிப்பின்படி நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட, நிதித்துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 7-ம் தேதி கூடி வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை தயாரித்தது.

இதற்கிடையே, முதல்வர் ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு அவற்றை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில், கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சத்தை தமிழ்நாடு மின் நிதி நிறுவனத்தில் வைப்பீடுசெய்து, 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உறவினர் மற்றும் பாதுகாவலருடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பராமரிப்புத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு பணிக்குழு அமைப்பு

அரசாணையுடன், நிதித்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தயாரித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டம் தோறும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியசிறப்பு பணிக்குழு மாவட்ட ஆட்சியர்தலைமையில் அமைக்கப்படுகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிய, சுகாதாரத் துறையிடம் உள்ள கரோனாவால் இறந்தவர்கள் பட்டியலை பயன்படுத்த லாம்.

இதுதவிர, பிறப்பு, இறப்பு பதிவாளர்களிடம் இருந்து தகவல் பெறலாம். அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தில் கிடைக்கும் செய்திகளை பெற்று ஆய்வு செய்து பயன்படுத்தலாம். மாவட்ட அளவிலான பணிக்குழு இந்த விவரங்களை கள ஆய்வுசெய்து உறுதி செய்ய வேண்டும்.

சில நேரங்களில், மருத்துவமனை செல்லாமல் வீடுகளிலேயே கரோனா பாதிப்பால் பெற்றோர் இறக்கும் நிகழ்வுகளில், இறப்புசான்றிதழ்களில் கரோனா இறப்புஎன்பது பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில்,பெற்றோரில் ஒருவர் உயிருடன் இருந்தாலோ அல்லது பாதுகாவலரோ உரிய ஆவணங்கள், மருத்துவ சான்றிதழ்கள் அதாவது மருத்துவரின் பரிசோதனை அறிக்கை, மருந்துச்சீட்டு, ஆர்டிபிசிஆர் பரிசோதனை, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட கரோனா பாதிப்பு என்பதை நிரூபிக்கும் சான்றிதழை வழங்கி இறப்பு சான்றிதழ் பெறலாம்.

பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் கரோனா காரணமாக இழந்திருக்கும் குழந்தைகளாக இருக்கும் நிலையில், 18 வயதுக்கு குறைவாக இருந்தால் மட்டுமே இந்த நிவாரணத்தை பெற முடியும்.

மேலும் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு குடும்ப வருமானம் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளை பொறுத்தவரை, உடன் இருக்கும்தாயோ, தந்தையோ குடும்பத்துக்காக சம்பாதிப்பவராக இருக்கும்பட்சத்தில் அவரது வருவாய் சான்றிதழ் கேட்டு பெறப்பட்டு, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இருப்பது உறுதி செய்யப்படும்.

அப்படி பட்டியலில் இடம்பெறாதபட்சத்தில், அந்த குடும்பத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை பெற்றோர் அரசு அல்லது பொதுத்துறை நிறுவன ஊழியராக இருந்தால் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறமுடியாது என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள் ளன.