போதுமான நிதி வருவாய் இல்லாத காரணத்தால் தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள காரணத்தால், பல தனியார் பள்ளிகளில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது போன்ற பல சிக்கல்களை தனியார் பள்ளிகள் சந்தித்து வரும் வேளையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 10 ஆயிரம் நர்சரி பிரைமரி பள்ளிகளை மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் நர்சரி பிரைமரி பள்ளிகள் வாழ்விழந்துள்ளது. ஏனென்றால் சொந்த இடங்கள் இல்லாத பல பள்ளிகள் வாடகை கட்டடத்தில் தான் இயங்கி வருகின்றன. அந்த கட்டிடத்துக்கு மாதந்தோறும் மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவைகளை செலுத்த வேண்டியுள்ளது. மேலும் அப்பள்ளிகளுக்கான 50 ஆயிரம் வாகனங்களின் இன்சூரன்ஸ் FC, சாலை வரி, இருக்கை வரி உள்ளிட்டவைகளையும் செலுத்த வேண்டியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பள்ளிகளுக்கான கல்வி கட்டணங்கள் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில் 75% கல்வி கட்டணங்களை மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் 25% பள்ளிகள் அந்த 75% கட்டணங்களை பெறவில்லை. இதனால் 5 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்விழந்துள்ளனர். இந்த சூழலில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் இப்பள்ளிகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை. அதனால் இந்த பள்ளிகளையும், அதில் பயிலும் 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களையும் அரசு எடுத்து கொள்ளட்டும்’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.