'டெட்' நிபந்தனையால் 10 ஆண்டாக தவிப்பு

கோவை:தமிழகத்தில், 'டெட்' தேர்வு கட்டாயமாக்குவதற்கு முன்பே, பணி நியமனம் செய்யப்பட்ட, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக எவ்வித பணிசலுகையும் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, கற்பித்தல் பணியில் ஈடுபடுவோர், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென, 2011, நவ. மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை வெளியாகும் முன், மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில், பணியில் சேர்ந்தவர்களில், அரசு மற்றும் சிறுபான்மை பள்ளிகளில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால், இதே அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்காததால், எவ்வித பணி சலுகைகளும் அனுபவிக்க முடியாத நிலை உள்ளது.அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்துரு கூறுகையில்,'' அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1,500 பேர் பணியில் அமர்த்தப்பட்டோம். 'டெட்' தேர்வு நிபந்தனைகளில் இருந்து, புதிய அரசு விலக்கு அளிக்க வேண்டும்,'' என்றார்.