சென்னை:'ஊரடங்கு முடிந்து, புதிய கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்ததும், இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்' என, இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, கடந்த மே 31ம் தேதியுடன் கோடை விடுமுறை முடிந்தது. நேற்று முதல், புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளது. வழக்கமாக ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும். கடந்த ஆண்டும், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், பள்ளிகள் திறக்கப்படவில்லை.
மாறாக, ஜூன் 1க்கு முன்னரே, மாணவர்களுக்கு புத்தகங்கள் மட்டும் வினியோகம் செய்யப்பட்டு, 'ஆன்லைனில்' வகுப்புகள் துவங்கின.இந்த ஆண்டு, புதிய கல்வி ஆண்டு பிறக்கும் போது, முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆசிரியர்களும் கொரோனா தடுப்பு பணியில் உள்ளனர். அதனால், பள்ளிகள் திறப்பு மற்றும் புத்தகங்கள் வழங்குவது மற்றும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து, இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் பழனி சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழக பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும், அனைத்து அரசு மற்றும் சுயநிதி பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை படிக்கும் மாணவர்களுக்கு, எந்த தேர்வுகளும் இன்றி தேர்ச்சி பெற்றதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், எந்த மாணவரையும், எட்டாம் வகுப்பு வரை நிறுத்தி வைக்கக்கூடாது. இதில், அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். எந்த பள்ளியும், எந்த மாணவரையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது எனக் கூறப்பட்டு உள்ளது.அதன்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
எனவே, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், இது குறித்து பள்ளியின் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, 'இ- - மெயில்' வாயிலாக, பள்ளிகள் அறிக்கை அனுப்ப வேண்டும்.தற்போதுள்ள ஊரடங்கு முடிவுற்ற பின், பள்ளிகளை திறப்பது குறித்து அறிவிக்கப்படும்.
மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து, பள்ளிகள் திறந்ததும் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment