உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

முனைவர் கமல.செல்வராஜ், அருமனை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், 34 ஆண்டுகளுக்குப் பின், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த, 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, மத்திய அரசு அதற்கான பணியைத் துவங்கியது.

அக்குழுவினர், நம் நாட்டில் பெரும் நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை பல்வேறு தரப்பட்ட, 2.50 லட்சம் பேரிடம் கருத்துகளைச் சேகரித்தனர். அதன் பின், அவற்றை கொள்கை முன்வரைவாகத் தயார் செய்து, நாட்டு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பார்வைக்கு முன்வைத்தனர்.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், சில திருத்தங்களை செய்து, கடந்த ஆண்டு முழு வடிவில் தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு. இதை, தமிழகம் தவிர, பிற மாநிலங்கள் அனைத்தும் எவ்வித ஆட்சேபனையுமின்றி ஏற்றுக்கொண்டன. 'ஹிந்தி திணிப்பு நடக்கிறது; குலத் தொழிலுக்கு அச்சாரம் போடப்படுகிறது' என, தமிழகத்தில் மட்டும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

வரும் கல்வியாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, அனைத்து மாநிலக் கல்வி அதிகாரிகளின் கூட்டத்தை, சில தினங்களுக்கு முன், மத்திய அரசு கூட்டியது. இதில், அனைத்து மாநிலக் கல்வி அதிகாரிகளும் பங்கேற்றனர். ஆனால், தமிழகக் கல்வி அதிகாரிகளை, அக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல், தமிழக அரசு தடுத்துள்ளது.

மேலும், தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது. இது எவ்வகையிலும் நியாயமானதல்ல. ஏனென்றால், இக்கல்விக் கொள்கையில், 3 வயது முதல், 6 வயது வரை அனைத்து மாணவர்களுக்கும், கட்டணமில்லாஅடிப்படை கல்வி வழங்கப்படும். தொடக்கப் பள்ளி வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை, மதியம் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் கடைப்பிடிக்கப்படும். நடுநிலைப் பள்ளியிலிருந்து, மாணவரின் திறமைக்கு ஏற்ற தொழிற்கல்வி கற்பிக்கப்படும்.

நாடு முழுதும் மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும். இதில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் உட்பட, 10 பிராந்திய மொழிகள் உட்படுத்தப்பட்டுள்ளன. விரும்பும் மொழியை கற்கலாம். இவற்றுடன், விரும்பினால் ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியைக் கூடக் கற்கலாம். இப்படி எண்ணற்ற நல்ல திட்டங்கள், இந்த தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுஉள்ளன. இக்கல்விக் கொள்கைக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. தமிழகத்திலும், இக்கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, மாணவர்களின் எதிர்காலக் கல்வியை, சுயசார்பு கல்வியாக மாற்ற, மத்திய அரசுடன் ஒத்துழைப்பதே விவேகமாகும்.


https://www.dinamalar.com/news_detail.asp?id=2775421