தஞ்சாவூர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் உள்ளவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தஞ்சை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு சதவீதம் குறைவாக இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.வீட்டில் தனிமையில் இருக்கும் நபர்களுக்கு தேவையானது குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், கலெக்டர் கோவிந்தராவ் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

இதன்படி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 80 பேர் தன்னார்வலர்களாக, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, தனிமையில் இருப்போரிடம் மொபைல் போனில் பேசி ஆலோசனை வழங்குகின்றனர். இதன் மூலம், கொரோனா பாதித்து தனிமையில் உள்ளவர்களின் மன அழுத்தம் குறைந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் உரிய நேரத்தில் கிடைக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், ''இந்தப் பணியில், விருப்பப்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். எந்த ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்தவில்லை,'' என்றார்.