யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி வலைதளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகள் என்னென்ன? - இதோ ஒரு பார்வை...

சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு தகவல்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் என பெயரிட்டு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசாணையாக வெளியிட்டது.

அதன்படி ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகின்றன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபாச புகைப்படங்கள் குறித்து புகார் அளித்த 24 மணிநேரத்திற்குள் அவற்றை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். புகார்கள் தொடர்பாக 36 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

தவறான தகவலை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்பதை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசோ, நீதிமன்றமோ தகவல்களை கேட்கும்போது கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் வழக்கு...

மத்திய அரசின் இந்த புதிய ஒழுங்கு விதிமுறைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி வளைதளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய ஒழுங்கு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.

இந்தப் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள சமூக வலைதளங்களுக்கு வழங்கப்பட்ட 3 மாத கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய விதிமுறைகள் தனிநபர் ரகசிய காப்பு உரிமையில் தலையிடும் வகையில் இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் ஃபேஸ்புக் நிர்வாகமும் அரசின் சில விதிமுறைகளில் உடன்படுவதாகவும், ஆனால் சில விதிமுறைகளை ஏற்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.