1-111

 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தேர்வில் டிஎன்பிஎஸ்சியின் அணுகுமுறை மீது மீண்டும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. புதிய அரசு இதில் தலையிட்டு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.


மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு இரண்டிற்கான எழுத்துத் தேர்வு 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி நடந்தது. இதில், வெறும் 33 பேரை மட்டும் தேர்வு செய்ததாக 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.


டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், 1,328 பேர் தேர்வு எழுதியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் காசி மாயன் கேட்டபோது, 1,392 பேர் என்று தகவல் அளிக்கப்பட்டது. 33 பேர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 1,289 என டிஎன்பிஎஸ்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.


தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் என்ற குழப்பம் இப்போது வரை தீர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் 33 பேர் தேர்வு செல்லாது என்றும், மீண்டும் சரியான முறையில் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவிற்குப் பின்பு, ஏற்கனவே தேர்வு எழுதியவர்களில் இருந்து 226 பேரை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில், வரும் ஜூன் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கு இந்த அறிவிப்பில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த 226 பேரும் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தால் செல்லாது என நிராகரிக்கப்பட்ட 33 பேரில், 6க்கும் மேற்பட்டவர்கள் இந்த 226 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

விதிமுறைகளின்படி வெறும் அப்ரென்டிஷிப் மட்டுமே முடித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும். அப்போதுதான் தேர்வு செய்யப்பட முடியும். ஆனால், தற்போது தேர்வு செய்யப்பட்ட 226 பேரில் சிலர், வெறும் அப்ரென்டிஷிப் மட்டுமே முடித்தவர்களாக உள்ளனர் என்பதும் ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்திருக்கிறது

மேலும் ஏற்கனவே போக்குவரத்துத் துறையில் அதிக சம்பளம் வாங்குவோர், அதை விட 50 சதவீதம் குறைவான இந்தப் பதவிக்குத் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்ட 226 பேரில் இடம் பெற்றுள்ளனர்

இந்தச் சூழலில், இந்தத் தேர்வு நேர்மையாக நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் குளறுபடி தொடர்வதாகவும், தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குமுறுகின்றனர் தேர்வர்கள்.

மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு இரண்டிற்கான தேர்வினை மீண்டும் நடத்தி, தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய புதிய அரசு உரிய நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்பதே தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது.