புதுடில்லி : கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து, ஜூன்,30 வரை பின்பற்றும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், ஏப்., 29ல், மே மாதத்திற்கான கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரேனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியை தனிமைப்படுத்துவது, சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை தடையின்றி சப்ளை செய்வது போன்றவற்றால், கொரோனா பரவல் குறைந்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்டோர் விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, ஏற்கனவே அறிவித்த கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை, ஜூன், 30 வரை கட்டாயம் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

உள்ளுர் பாதிப்பு நிலவரத்தை ஆராய்ந்து, விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து, அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உரிய நேரத்தில் முடிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.