புதுக்கோட்டை:கொரோனா சிகிச்சை வார்டுகள், படுக்கைகளில் உள்ள கிருமிகளை அழிக்க புதிய கருவியை, பாலிடெக்னிக் மாணவர் கண்டுபிடித்து உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே, வேம்பங்குடி பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் மகன் சிவசந்தோஷ், 18; புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில், சக நண்பர்களுடன் சேர்ந்து, 'அல்ட்ரா வயலட் லைட்' மூலம் கொரோனா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் கருவியை செய்து, இணையத்தில் வெளியிட்டார்.

அதைப் பார்த்து, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அந்தக் கருவியை வாங்கிச் சென்றுள்ளது. இப்படி பல கருவிகளை கண்டுபிடித்துள்ள சிவசந்தோஷை பாராட்டிய, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், அங்கு பணிபுரியவும் வாய்ப்புகொடுத்துள்ளது.

சிவசந்தோஷ் கூறியதாவது: கொரோனா வார்டுகளில், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களின் தும்மல், இருமல் மூலம் கிருமிகள் வெளியேறி, மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.இந்த கிருமிகளை காற்றோடு இழுத்து உள்வாங்கி கிருமியை அழித்து, காற்றை மட்டும் வெளியேற்றும் உபகரணத்தை வடிவமைத்து உள்ளேன்.இதை, 'ஏசி' போல ஒவ்வொரு அறையிலும் பொருத்தி விட்டால், அந்த அறைகளில் உள்ள கிருமிகளை அழித்து விடும். அதனால், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.

அதேபோல, யு.வி., லைட் மூலமே நோயாளிகளின் படுக்கைகளில் உள்ள கிருமிகளையும், ஆம்புலன்ஸ் படுக்கையில் உள்ள கிருமிகளையும் அழித்து சுத்தம் செய்யும் உபகரணம் ஒன்றும் வடிவமைத்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.மாணவரின் கண்டுபிடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.