நான் பணியிலிருந்து ஓய்வுபெற்று, 10 ஆண்டுகளாக, குடும்ப சூழ்நிலை காரணமாக மாத ஓய்வூதியத்திற்கு வருமான வரி செலுத்த முடியவில்லை. இப்போது புதிதாக எவ்வாறு வருமான வரி கட்ட ஆரம்பிப்பது? ராமராவ், தஞ்சை.இணையத்திலும் கணினியிலும் நல்ல பழக்கம் உண்டென்றால், நீங்களே வருமான வரி வலைத்தளத்துக்குச் சென்று, பதிவு செய்து, விபரங்களைச் சமர்ப்பிக்கலாம். அல்லது பக்கத்தில் உள்ள பட்டயக் கணக்காளரது உதவியை நாடுங்கள். கடந்த நிதியாண்டுக்கான வருமான வரியை வரும் செப்டம்பருக்குள் செலுத்த வேண்டும். முந்தைய ஆண்டுகளுக்கான வரியைச் செலுத்த வேண்டும் என்றால், அதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. அந்த நிலையில், உங்கள் மொத்த வருவாய், வருமான வரி விலக்குக்குள் இருக்குமேயானால், வரி ஏதும் செலுத்த வேண்டாம். கூடுதலாக இருக்குமேயானால், அப்போது வரியோடு சேர்த்து, 1,000 ரூபாயை தாமதத்துக்கான அபராதமாகச் செலுத்த வேண்டும். நான் ஒரு ஓ.டி.டி., தளத்தில் சந்தா செலுத்தியுள்ளேன். ஒவ்வொரு மாதமும், 'ஆட்டோ டெபிட்' முறையில், சந்தா தொகை போய்விடுகிறது. இதை எப்படி நிறுத்துவது?பவானி சிவராமன்,சுவாமிமலை. ஓ.டி.டி., தளங்களில் சந்தாவை நிறுத்தும் வசதியை, எங்கோ மூலையில் மறைத்து வைத்து இருப்பர்.


அதைக் கண்டுபிடித்து நிறுத்துவது உங்கள் பாடு. ஆனால், செப்டம்பர் 30ம் தேதிக்குப் பின், வங்கிகள் ஆட்டோ டெபிட் வசதியை வழங்காது. ஐந்து நாட்களுக்கு முன்னரே, 'உங்களுக்கு ஆட்டோ டெபிட் வரப்போகிறது, அனுமதிக்கலாமா' என்று உங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே, பணம் வெளியே போகும். இன்னும் சில மாதங்களில், இதுபோன்று கண்ணுக்குத் தெரியாமல் பணம் கரைவது குறையும்.


என் மகனுக்கு வங்கியில், 2 லட்சம் ரூபாய் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தேன். இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் கல்விக்கடன் கிட்டவில்லை. தகவல் அறியும் சட்டம் மூலமாகவோ, நீதிமன்றம் மூலமாகவோ தீர்வு காணலாமா? சூலுார் ஆ.


குமரேசன், பெரியநாயக்கன்பாளையம்.கேட்டுப் பாருங்கள். கல்விக் கடன் கொடுப்பதற்கு பல வங்கியாளர்கள் தயங்குகின்றனர். கல்விக் கடனில் தான் வாராக்கடன் அதிகமாக உள்ளது; இதனால் கடன் வழங்கிய அதிகாரிகள் மீது பிற்காலத்தில் வழக்கு தொடரப்படுகிறது என்பன போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. எல்லா மாணவர்களும் கடன் கட்டாமல் ஓடிப் போவதில்லை; விதிவிலக்குகளுக்காக எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை பணயம் வைக்கலாமா?அஞ்சலக ஆயுள் காப்பீட்டில், 15 ஆண்டுகள் காப்பீடு கட்ட வேண்டும்.


என்னால் முடியாததால், 33 மாதங்கள் மட்டுமே கட்டினேன். தற்போது மெச்சூரிட்டி ஆகிவிட்டது. அதை எடுக்க போகும்போது, தபால் துறையில், குறைந்தபட்சம், 36 மாதங்களாவது பணம் கட்டியிருக்க வேண்டும் என்கின்றனர். நான் செலுத்திய பணத்தை எப்படிப் பெறுவது?மீனாட்சி, மதுரை.குறைந்தபட்சம், 36 மாதங்களாவது பிரீமியம் செலுத்தினால் தான், அதற்கு உயிர் இருக்கும்.


இல்லையெனில், அந்தப் பாலிசி செல்லாததாகிவிடும். உங்கள் சிரமங்களைச் சொல்லி, போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு மனு கொடுங்கள். உங்கள் நிலைமையைக் கருத்தில் கொண்டும், நீங்கள் வேண்டுமென்றே விதிகளை மீறவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்திக்கொண்டால், உரிய நிவாரணம் வழங்க அவருக்கு சிறப்பு அதிகாரம் உண்டு.மியூச்சுவல் பண்டு என்றால் என்ன? அதில் எப்படி முதலீடு செய்வது?


பரணிதரன், காஞ்சிபுரம். பங்குச் சந்தையிலோ, கடன் பத்திரங்களிலோ நேரடியாக முதலீடு செய்வதற்கு உங்களுக்குப் போதுமான அனுபவமும் நேரமும் திறனும் இல்லாமல் இருக்கலாம். அந்த நிலையில் உதவுவது தான், 'பரஸ்பர சகாய நிதி' என்று சொல்லப்படும் மியூச்சுவல் பண்டுகள். இதில் திறன்மிகுந்த பண்டு நிர்வாகிகள் இருப்பர்.அவர்கள் லாபமீட்டக்கூடிய நிறுவனங்கள், பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் உங்கள் பணத்தை முதலீடு செய்து, சொத்தின் மதிப்பை அதிகப்படுத்துவர்.


'ஆம்பி' அங்கீகாரம் பெற்ற மியூச்சுவல் பண்டு முகவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் முதலீடு செய்ய அவர்கள் உதவுவர்.நான், 2017 ஆகஸ்டில், டி.எச்.எப்.எல்., நிறுவனத்தில், 28 ஆயிரம் ரூபாய்க்கு என்.சி.டி., டிபெஞ்சரை, டீமேட் வழி வாங்கினேன். ‌இரண்டு ஆண்டு வட்டி வந்தது. 3 ஆண்டு முதிர்வு காலம் முடிந்ததும் ‌‌எனக்கு ‌‌அசல் கிடைக்கவில்லை.


விசாரித்ததில் கம்பெனி மீது வழக்கு நடப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் எனக்கு பணம் திரும்ப கிடைக்குமா? வழக்கு கொடுப்பதா? என்ன செய்வது?பி.பெரியசாமி, இ - மெயில்.வழக்கு இன்னும் முடிந்து, எந்த தீர்வும் எட்டப்படவில்லை.


இதுநடுவே, டி.எச்.எப்.எல்., புரமோட்டரான கபில் வாதவான், தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் முன்பு இந்த வழக்கைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய கடிதங்களைக் கொடுத்துள்ளார். அதன்மீது வாதப் பிரதிவாதங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்த விஷயத்தில் தீர்வு ஏற்படுவதற்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகலாம்.வீட்டுக்கடன் நிறுவனம் ஒன்றில், வீட்டு அடமானக் கடன் பெற்றுள்ளேன். வீட்டுக் கடன் முடிந்துவிட்டது.


அடமானக் கடன் வட்டி விகிதம், 13 சதவீதம் உள்ளது. இதைக் குறைக்க முடியாது என்கிறது வங்கி. வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாதா?மலர், சென்னை.முடியாது.ரெப்போ விகிதத்துக்கு மேல், ஒரு வங்கி தன் நிர்வாகக் கட்டணம், லாபம் போன்ற அம்சங்களையும் இணைத்தே வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கிறது. அதனால் தான், வங்கிக்கு வங்கி, வட்டி விகிதத்தில் வேறுபாடு.


உங்களது அடமானக் கடனை, குறைந்த வட்டி விகிதம் உள்ள வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால், செயலாக்கக் கட்டணமும், ஜி.எஸ்.டி.,யும் கூடவே செலுத்த வேண்டியிருக்கும். புதிய வங்கிக்கு அடமானக் கடனை மாற்றுவது லாபகரமானதா என்று கணக்கிட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, இ-மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.க்ஷஆர்.வெங்கடேஷ்pattamvenkatesh@gmail.com9841053881