திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி கணித ஆசிரியர் கருப்புப் பூஞ்சை நோய் தாக்கி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு (37). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சின்னராசுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சின்னராசுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சின்னராசுக்குக் கண்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்குக் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னராசு, சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி கணித ஆசிரியர் கருப்புப் பூஞ்சை நோயால் உயிரிழந்த சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.