கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவா்கள் இணையதளம் வாயிலாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் வீர ராகவ ராவ் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்வதற்கான சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் இணையம் வாயிலாகவோ, அல்லது சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பிக்கும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.