மதுரையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத இரண்டு டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மதுரை, ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன், 45. இவர், 2020 ஜூலையில், பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.மாணவியின் தந்தை மாநகராட்சி, மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. இது குறித்து, கோதண்டம் என்பவர், 'போக்சோ' வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.நீதிமன்ற உத்தரவின்படி, விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இருவர் சேர்க்கப்பட்டு, அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.இந்நிலையில், விஜயபிரபாகரனை, மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா, 'சஸ்பெண்ட்' செய்தார்.அவர் கூறுகையில், ''புகார் அளித்தவுடன், பெண்கள் பள்ளியில் இருந்து, ஆண்கள் பள்ளிக்கு விஜயபிரபாகரன் மாற்றப்பட்டார். மாநகராட்சி கமிஷனர் உத்தரவுப்படி, சஸ்பெண்ட் செய்துள்ளோம். வழக்கில், கல்வி அதிகாரிகளை சேர்த்துள்ள தகவல் எனக்கு தெரியாது,'' என்றார்.