மதுரை : தமிழகத்தில் கல்வித்துறை உத்தரவின்றி வாய்மொழி உத்தரவு மற்றும் வாட்ஸ் ஆப் தகவல் அடிப்படையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வரச் சொல்லி கொரோனா தொற்றுக்கு ஆளாக்கும் அதிகாரிகளால் மனஉளைச்சல் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.


மதுரையில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் தமிழ்க்குமரன் தெரிவித்துள்ளதாவது: கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித உத்தரவுகளும் இன்றி செவிவழி மற்றும் வாட்ஸ்ஆப் தகவல்கள் மூலம் ஆசிரியர்களை பள்ளிக்கு வருமாறு அதிகாரிகள் மிரட்டல் விடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.


பிளஸ் 2 தவிர பிற வகுப்புகள், குறிப்பாக தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்களே வராத நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று வருவதால் 300க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதித்துள்ளனர். 17 பேர் இறந்துள்ளனர்.அரசின் உரிய உத்தரவுகள் இன்றி பல மாவட்டங்களில் கல்வி அதிகாரிகளின் தனிப்பட்ட முடிவால் ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொல்லி வற்புறுத்துகின்றனர். அவர்கள் மீது நீதிமன்றம் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்