சென்னை, ஏப். 16--கல்லுாரி மாணவர்களுக்கான, 'அரியர்' தேர்வுகள், 'ஆன்லைன்' வழியாக நடத்தப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்தத் தேர்வுகளை, எட்டு வாரங்களில் நடத்தி முடிக்கும்படி, பல்கலை மற்றும் அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிகிறது.தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால், கல்லுாரி மாணவர்களுக்கு, இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற செமஸ்டர்களில் தேர்ச்சி பெற்றதாக, தமிழக அரசு அறிவித்தது. அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால், அதிலும் தேர்ச்சி பெற்றதாக தெரிவித்தது. இதற்கான உத்தரவு, 2020 ஆகஸ்டில் பிறப்பிக்கப்பட்டது.விசாரணைஇந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், மனுக்கள் தாக்கல் செய்தனர். 'அரியர் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும்' என்றும் கோரியிருந்தனர்.மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ''பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள், அரியர் தேர்வு ரத்துக்கு உடன்படவில்லை; அதைத் தொடர்ந்து, அந்த கல்லுாரிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ''கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு மட்டுமே, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன,'' என்றார்.இதையடுத்து, 'அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது; பல்கலை மானியக் குழு உடன் ஆலோசித்து, தேர்வு நடைமுறையை மேற்கொள்ள, அரசு பரிசீலிக்க வேண்டும்' என, முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது.இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. யு.ஜி.சி., தரப்பில், வழக்கறிஞர் வி.சுதா ஆஜரானார்.அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவர்களுக்கு தேர்வு நடத்த, பல்கலைகள் முடிவு செய்துள்ளன. தேர்வு எழுதாமல், மாணவர்கள் பட்டம் பெற முடியாது. ''ஆன்லைனில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், ''ஆன்லைன் தேர்வில் சிரமம் இருப்பதாக, மாணவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அதனால், நேரடி தேர்வுக்கு பரிசீலிக்க வேண்டும்,'' என்றார்.அறிக்கைஉடனே தலைமை நீதிபதி பானர்ஜி, ''தற்போதைய நிலையில், நேரடி தேர்வு நடத்தும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகளின் முடிவுக்கு விட்டு விடுவோம். நடைமுறை சூழ்நிலை என்ன என்பது, நமக்கு தெரியாது,'' என்றார்.ஏற்கனவே, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும்படி, வழக்கறிஞர் சண்முகம் கோரினார்.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:பல்கலை மானியக் குழுவின் வழிமுறைகளை பின்பற்றுவதாகவும், செமஸ்டர் தேர்வு மற்றும் அரியர் தேர்வுகளை, மாணவர்கள் எழுத வேண்டும் என்றும், அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஏற்கனவே தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.அனுமதிமாணவர்களுக்கான தேர்வு தேதியை, பல்கலை மானியக் குழு உடன் ஆலோசித்து, சம்பந்தப்பட்ட பல்கலைகள் மற்றும் அரசு அறிவிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையை பரிசீலித்து, பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் பரிந்துரைக்கும் தேதிக்கு அனுமதி வழங்க, யு.ஜி.சி.,யும் முயற்சிக்க வேண்டும்.தேர்வு நடவடிக்கைகள் அனைத்தையும், பல்கலைகள், நிறுவனங்கள், அரசு விரைந்து முடிக்க வேண்டும்; எட்டு வாரங்களில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, ஜூலை இரண்டாவது வாரத்துக்கு தள்ளி வைத்தது.