சென்னை : 'தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கையை மீறி செல்லவில்லை; மற்ற மாநிலங்களை விட, பாதிப்பு குறைவு தான்' என, சுகாதார துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், ஒரு வழக்கின் விசாரணை நடந்த போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், வேறு வழக்குக்காக ஆஜரானார். அவரிடம், கொரோனா வைரஸ் பரவல் குறித்து, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, அட்வகேட் ஜெனரல் கூறியதாவது:

பல மாநிலங்களில், வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இரண்டாவது அலை வேகமாக பரவுகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடந்ததால், வைரஸ் பரவல் அதிகரித்ததாக கூறினாலும், தேர்தல் நடக்காத மஹாராஷ்டிரா, கர்நாடகா, டில்லி மாநிலங்களில், தொற்று கட்டுப்பாட்டுக்குள் இல்லை. மஹாராஷ்டிராவில் ஒரே நாளில், 60 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், 7,000 பேர் தான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தடுப்பு மருந்து போதிய அளவில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

இதையடுத்து, 'நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய, கொரோனா தடுப்பு முறைகள் குறித்து, அரசு ஏதும் ஆலோசனை வழங்க உள்ளதா; உயர் நீதிமன்ற நிர்வாக குழு கூடி ஆலோசிக்க உள்ளது' என, தலைமை நீதிபதி தெரிவித்தார்.இதுகுறித்து, சுகாதார துறை செயலர் நேரில் வந்து விளக்கம் அளிப்பதாக, அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.பிற்பகலில், தலைமை நீதிபதியை சந்தித்து, சுகாதார துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில், வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது; மற்ற மாநிலங்களை விட பாதிப்பு குறைவு. வைரஸ் பாதிப்பு கையை மீறி செல்லவில்லை. நாடு முழுதும் உள்ள பாதிப்பு குறித்தும், பிற மாநிலங்களில் உள்ள பாதிப்பு குறித்தும், நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

தினசரி, 10 ஆயிரம் முதல், 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, வெள்ளி அன்று ஆலோசனை மேற்கொள்கிறோம். தினசரி ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கும், வைரஸ் தொற்று வந்துள்ளது. ஆனால், தீவிரமான பாதிப்பு இருக்காது. தமிழகத்தில், தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் யாரும், வைரஸ் தொற்றால் இறக்கவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.