சென்னை:கொரோனா பரவல் பீதி காரணமாக, சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் நிலை காவலர் தேர்வு; மின் வாரிய பணிக்கான தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள, 10 ஆயிரத்து, 906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்தது.

கோரிக்கை

இதற்கான நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி, 21ம் தேதி முதல் நடக்க இருந்தது.கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர்ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், 'வரும் 21ம் தேதி நடக்க இருந்த உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி தேர்வு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகின்றன; இந்த தேர்வுகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என, தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

மின் வாரிய தேர்வு

தமிழக மின் வாரியம், 600 உதவி பொறியாளர்; 500 இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2020 பிப்ரவரி, மார்ச் மாதங்களில், பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றது. அதற்கு, 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். அந்த ஆண்டின் மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திட்டமிட்டபடி மே மாதம், தேர்வு நடத்தப்படவில்லை.

பின், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தேர்வை நடத்த மின் வாரியம் முன்வரவில்லை.நீண்ட இழுபறிக்கு பின், அந்த தேர்வுகள், வரும் 24, 25, மே 1, 2 மற்றும் மே 8, 9, 15, 16ம் தேதிகளிலும் நடத்தப்படும் என, பிப்., 12ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால், உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் பதவிக்கான எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

'இந்த தேர்வுகள் நடக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள், www.tangedco.gov.in என்ற இணையதளத்தையும், அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் அவ்வப்போது பார்வை யிடவும்' என, மின் வாரியம் அறிவித்துள்ளது.