சென்னை: 'கற்போம்; எழுதுவோம்' திட்டத்தில் படிப்பவர்களுக்கும், கல்வி, 'டிவி'யில், 'வீடியோ' பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

முறைசாரா கல்வி திட்ட இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத, 3.10 லட்சம் பேருக்கு கற்போம்; எழுதுவோம் இயக்கம் வாயிலாக, எழுத்தறிவு வழங்கப்படுகிறது. இதற்காக அரசு மற்றும்அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி வளாகங்களில், 15 ஆயிரத்து, 823 கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தன்னார்வ ஆசிரியர்களின் உதவியுடன், கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, கற்போர் பயிற்சி திட்டத்தில் உள்ள பாடக்கருத்துகள், ஒலி - ஒளி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன.இந்த பாட வீடியோக்கள், கற்போம்; எழுதுவோம் இயக்கத்தின் கீழ் படிப்பவர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசின் கல்வி, 'டிவி'யில் தினமும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இன்று முதல் தினமும், மாலை, 7:00 முதல், அரை மணி நேரம் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், முதியோரும் அதிகம் படித்து வருகின்றனர்.