மதுரை:'தமிழகத்தில் கொரோனா தீவிரத்தை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பு பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தீவிரமடைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசும் வேண்டுகோள் விடுத்து, போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 9.5 லட்சம் பேர் தேர்வு பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி தான் தேர்வுக்கும், தேர்வுப் பணியிலும் பங்கேற்க வேண்டும். இது கொரோனா அதிகரிக்கும் வாய்ப்புக்கு வழிவகுக்கும். எனவே சி.பி.எஸ்.இ., போல் பிளஸ் 2 தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்.

மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நீரழிவு மற்றும் பல்வேறு இணை நோய்கள் உள்ள ஆசிரியர் பொது போக்குவரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே அனைத்து பள்ளிகளுக்கும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.