சென்னை:கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டில் உள்ளதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மே 1 முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
சுற்றறிக்கை
இது குறித்து, முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:கொரோனா தொற்றால், நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து, கல்வி கற்கும் சூழல் ஏற்படவில்லை. பிளஸ் 1 வரையிலான மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, மார்ச் 22ல் மூடப்பட்டன. பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, செய்முறை தேர்வு முடிந்துள்ளது. மே 5ல் நடக்கும் பொது தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அதனால், மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பிளஸ் 2வுக்கு பொது தேர்வு தேதி குறித்த மறு அறிவிப்பு வரும் வரை, மாணவர்களை பொது தேர்வுக்கு தொடர்ந்து தயார் செய்தல் வேண்டும். மற்ற மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, 'டிவி'யிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மே 1 முதல் பள்ளிகளுக்கு வர தேவையில்லை என, அறிவிக்கப் படுகிறது. பிளஸ் 2 பொது தேர்வு தேதி அறிவிக்கப்படும் வரை, ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே, மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும்.இணைப்பு பாடங்கள், பயிற்சி புத்தகம் போன்றவற்றின் பாடங்களை, கல்வி, 'டிவி' வழியாக கற்கவும், பயிற்சிகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி வழிகாட்ட வேண்டும்.
மகிழ்ச்சி
மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மொபைல் போன் எண்ணை பெற்று, 'வாட்ஸ் ஆப்' மற்றும் பிற டிஜிட்டல் வழிகளில் இதை மேற்கொள்ளலாம்.இந்த வழிகளில், மாணவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளின் விடைத்தாள்களை சரிபார்த்து, மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில், அரசு கோடை விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், ஆசிரியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மே இறுதியில் 'டூட்டி'
பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் விடுத்த சுற்றிக்கை:அடுத்த கல்வி ஆண்டுக்கு பள்ளிகளை தயார் செய்யும் பொருட்டு, அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள, மே மாத கடைசி வாரத்தில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும். இதற்கான அறிவிப்பு, தனியே வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment