புதுடில்லி:'கோவாக்சின்' தடுப்பூசி பி.1.617 என அழைக்கப்படும் இரட்டை உருமாறிய இந்திய வகை கொரோனா வைரஸ்களை வீரியமிழக்க செய்வதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பாஸி தெரிவித்துஉள்ளார்.


தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 'கோவாக்சின்' தடுப்பூசிகளை தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசி 78 சதவீத செயல் திறனுடன் செயல்படுவது பரிசோதனையில் தெரியவந்தது.நம் நாட்டில் தற்போது பரவி வரும் இரண்டாவது அலைக்கு இரட்டை உருமாற்றம் அடைந்த பி.1.617 வகையை சேர்ந்த வைரசே காரணம் என உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்தது.


இந்த இரட்டை உருமாற்றம் அடைந்த வைரசால் மஹாராஷ்டிரா மற்றும் டில்லியில் தொற்று பரவலும் உயிரிழப்புகளும் தீவிரமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.இந்த இரட்டை உருமாற்றம் அடைந்த வைரஸ் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டதாகவும் பின் 17 நாடுகளில் இந்த வகை வைரஸ் பரவியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் ஐ.நா. சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும் பெருந்தொற்று நிபுணராகவும் உள்ள டாக்டர் ஆண்டனி பாஸி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:சமீபத்தில் கிடைத்த புள்ளி விபரங்களின் படி இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனாவின் பி.1.617 என்றழைக்கப்படும் இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளை வீரியமிழக்க செய்கிறது.எனவே இந்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளஒரே வழி.இவ்வாறு அவர் கூறினார்.